Sunday 5 July 2020

தினம் ஒரு புத்தகம் -பவா செல்லதுரையின் “பங்குக்கறியும் பின்னிரவுகளும்”




பவா செல்லதுரையின் “பங்குக்கறியும் பின்னிரவுகளும்”

அ.திருவாசகம்.

தமிழ் இலக்கியச் சூழலில் தனது தனித்துவமான மொழிநடையாலும், கதை சொல்வதன் மூலமும் சாதி, இனம், மொழி, பால் பாகுபாடு இன்றி அன்பின் அடையாளமாக இந்தப் பூமிப் பந்தில் வாழும் தமிழர் அனைவராலும் கொண்டாடப்படும் பவா செல்லதுரை இந்த நூலை எழுதியுள்ளார்.

இருபது தலைப்புகளில் பல்வேறு மனிதர்கள் பற்றியும் , அவர்கள் தொடர்பான நிகழ்வுகள் மற்றும் நிறை குறைகள் என தான் புரிந்துகொண்ட விஷயங்களை, அப்படியே, தனது மொழியில் இந்த நூலில் மிகவும் நேர்த்தியாகப் பதிவு செய்துள்ளார்.

பங்குக்கறியும் பின்னிரவுகளும் என்ற கட்டுரையின் தலைப்பையே இந்த நூலுக்கு தலைப்பாகத் தந்துள்ளார்.

பங்குக்கறியும் பின்னிரவுகளும் தலைப்பில், தனது அம்மாவின் நினைவையும், அவர் தந்து விட்டுப் போயிருக்கும் உணவின் மறக்கமுடியாத ருசியையும் , சுவையான நாட்கள் என்று பல பழைய நினைவுகளை நினைத்துப் பார்த்து பூரிப்படைந்து அதனால் ஏற்பட்ட உணர்வையும் இக்கட்டுரையில் வெளிப்படுத்தியுள்ளார்.

பூமிப்பந்தில் அந்தந்தப் பகுதியில் எந்தப் பயிரின் விளைச்சல் அதிகமாக இருக்குமோ அதுவே அந்தப் பிரதேசத்தின் உணவை தீர்மானிக்கிறது. குறிப்பாக திருவண்ணாமலை பகுதியில் மல்லாட்டை என அழைக்கப்படும் நிலக்கடலை பிரசித்தி பெற்றது.

அதனுடைய துவையலில் துவங்கி முருங்கைக்கீரை, கருவாட்டு குழம்பு வரை அதன் இருப்பு இன்றி எந்த ஒரு சாப்பாட்டையும் தான் ருசித்தது இல்லை எனவும்,
தன் வீட்டுக் களியையும், கறிக்குழம்பையும் தாண்டி உலகின் எத் திசையிலும் இது மாதிரியான ருசியை தான் இதுவரை சுவைத்ததில்லை எனவும் பதிவு செய்துள்ளார்.

பங்குக் கறி என்பது பெரும்பாலும் விபத்திலோ அல்லது குள்ளநரியின் கவ்வலிலோ அடிபடும் ஆட்டை சுத்தம் செய்து ஆட்டின் எடைக்கு ஏற்ப பத்தோ, இருபதோ என பங்கு பிரித்து, அனைவருக்கும் ஒரே மாதிரியாக பிரித்தெடுத்து, அந்த இரவிலும் கதவு தட்டப்பட்டு அனைவருக்கும் கறி வழங்கப்படும். அந்த நொடியே அது எத்தனை இரவானாலும் சமைக்க தொடங்கிவிட வேண்டும். சுடுசோறும். பங்குக்கறிக் குழம்பும் பின்னிரவுகளுக்கு உகந்தவை என தன் அனுபவத்தை இக்கட்டுரையில் பகிர்ந்து கொள்கிறார்.

பேரன்பின் பெருமழை
என்ற கட்டுரைத் தொகுப்பில் கற்றது தமிழ் படத்தின் இயக்குனர் ராம் அவர்களுக்கும், தனக்கும் உள்ள நட்பைப்பற்றியும், அவரின் நேர்மையைப் பற்றியும் எடுத்துரைக்கிறார்.

ஒருமுறை இயக்குனர் ராம் பவாவை சந்திப்பதற்காக திருவண்ணாமலை வந்தபோது, பவா வீட்டில் அறையில் தங்க மறுத்த ராம், வானத்தை, நிலாவை, நட்சத்திரங்களை, கண்ணுக்கு காட்டி ஒரு திறந்த வெளியில் படுக்கவேண்டும் என பவாவிடம் சொல்வது இயற்கையை நேசிக்கும் அந்த மனிதனின் மகத்தான மாண்பு நம் கண்முன்னே விரிகிறது

தங்கமீன்கள் எடுத்துக் கொண்டிருந்த போது பெரும் பண கஷ்டத்தில் இருந்துள்ளார் ராம் . அச் சூழ்நிலையில், திருவண்ணாமலையில் ஒரு கருத்தரங்கதிற்கு ராம் அவர்களை பவா அழைத்துள்ளார். கூட்டம் பேசி முடித்தவுடன் ஒரு கவரை ராமிடம் வழங்கிய போது தனது இடக்கையால் புறந்தள்ளிவிட்டு பேருந்துக்கு மட்டும் எனக்கு உங்கள் பாக்கெட்டில் இருந்து 200 ரூபாய் கொடுத்தால் போதும், என்று சொன்ன அந்த உயர்ந்த மனிதனின் நேரிய பண்பை நம்மால் உணர முடிகிறது.

ஒவ்வொரு மனிதருக்கும் அவருடைய வாழ்க்கையில் ,சிந்தனைகளையும், குணங்களையும் பட்டை தீட்ட, உதவி செய்ய அவரை நன்கு உணர்ந்த ஒரு நண்பர் அமைவது இயற்கையின் வரம்.

உண்மையான நண்பணின் உள்ளக்கிடக்கையை நாம் அருகில் இல்லாத போத அறிந்து கொள்ளலாம். அந்த அன்பு அளவிட முடியாது.

இயக்குனர் ராமின் உற்ற தோழனாய், அவருடைய உதவி இயக்குனராக பணியாற்றி வந்த மாரி செல்வராஜ் தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள் சிறுகதைத் தொகுப்பின் இறுதிகட்ட வேலைகளின் போது பவா செல்லதுரை வீட்டில் தங்கி செழுமைப்படுத்திக் கொண்டிருந்த போது, மதிய உணவிற்காக மீன் குழம்பும், பொரித்த மீன் துண்டுகளும் சாப்பாட்டு மேஜையில் வைத்து சாப்பிட அழைத்த போது மாரி செல்வராஜ் பவாவிடம்,
நல்ல சாப்பாடு சாப்பிட்டு ரொம்ப நாள் ஆச்சு.

எங்க டைரக்டர் இன்னைக்கு மதியம் சாப்பிடல. அவர் கையில் சுத்தமா காசு இல்ல. நான் மட்டும் எப்படி ண்ணா இதைச் சாப்பிட? எனச் சொல்வதை, நினைக்கும் போது

“புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாங் கிழமை தரும்”
என்ற குறள் தான் என் முன்னே வருகிறது.

தொடக்கமும் தொடர்ச்சியும்
என்ற கட்டுரையில் எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களைப் பற்றி அற்புதமாய் பதிவு செய்துள்ளார.
இக்கட்டுரையை வாசித்த போது பிரபஞ்சனும், பவாவும் நல்ல
நண்பர்களாக நம் மனதில் உதயமாகிறார்கள். பரஸ்பரம் அன்பை
மட்டும் அல்லாமல், துன்பத்தையும் பகிர்ந்து கொள்ளும் மானுடப் பண்பு பவாவுக்குரிய சிறப்பாகிறது.

பவா நட்பின் மகத்துவத்தை சரிவர உணர்ந்து கொண்டவர். இன்பத்திலும் துன்பத்திலும் தானாகவே முன்வந்து நண்பர்களுக்கு உதவக் கூடியவர் .

ஒரு நாள் சென்னை அண்ணா சாலையின் தென்புறம் பவா செல்லத்துரை மற்றும் அவரது நண்பர்கள் சிலர் நின்று கொண்டிருந்த சமயத்தில், மார்பில் அணைக்கப்பட்ட நான்கு பீர் பாட்டில்களோடு சாலையைக் கடந்த பிரபஞ்சனிடம் அந்த இரவு பத்துமணிக்கு சிலர் ஆட்டோகிராப் கேட்டுள்ளனர்.

பீர் பாட்டில்களை பிரபஞ்சன் அவர்கள் கையிலேயே தாற்காலிகமாகத் தந்துவிட்டு ,அந்த சாலையின் ஓரமாக நின்று அவர்களுக்கு ஆட்டோகிராப் கையெழுத்திட்டு தந்துள்ளார்.

அப்பொழுது அவரை சந்தித்த பவா செல்லதுரை, பிரபஞ்சனைப் பார்த்து, இதெல்லாம் வேணாம் சார். உங்களுக்கென்று தமிழ்நாட்டில் ஒரு பெரிய இமேஜ் இருக்கிறது என்று சொன்ன பொழுது
அதனைத் தடுத்த பிரபஞ்சன்,

அப்படி ஒரு பொய்யான இமேஜை நான் வெறுக்கிறேன் பவா. நான் எதுவாக இருக்கிறேனோ அப்படியான பிம்பம் மட்டுமே வெளியிலேயும் பதிவாக வேண்டும்.

நான் எப்போதாவதுதான் குடிப்பவன். அது வெளியே தெரிய வேண்டாம் எனில் இதை இனி தொடக்கூடாது இல்லையா? என்று சொன்ன அந்தப் படைப்பாளியின் உள்ளும், புறமும் எவ்வளவு தூய்மையானது,

பிரபஞ்சன் எவர் கைகளிலும் நிரந்தரமாக அடக்கிவிட முடியாத நீர் என்ற பவாவின் வார்த்தை எவ்வளவு வலிமையானது.

உலகக் கவி என்றும். தன் படைப்பு நோபலுக்கு தகுதியானது எனத் தன்னைத்தானே புகழ்ந்து கொள்ளும் மனிதர்களுக்கு மத்தியில் பிரபஞ்சன் என்ற அசல் இன்றளவும் தமிழ் வாசிக்கும் பலராலும் நேசிக்க படுவதற்கு அவரிடம் இயல்பிலேயே இன்றளவும் இருந்து வருகிற இந்த எளிமையும் உண்மையும் தான் காரணம் என பவா கூறுவது முற்றிலும் உண்மை.

மானுட ஜீவிதத்தில் அவருக்கு ஏற்பட்ட முரண்பாடுகளையும், சமூக வாழ்வில் ஒரு படைப்பாளியால் சகித்துக் கொள்ள முடியாத அருவருப்பு மிக்க சமரசங்களையும் உதறித்தள்ளுபவராகவும்,

எதிர்கால வாழ்க்கை வசதிகளைப் பற்றி எந்த கவலையும் இன்றி நம்மோடு அலைந்து திரிந்த ஒரு எளிய படைப்பாளியாகவும் தான் பிரபஞ்சனை ஒவ்வொருவருமே உணர முடியும் என கூறுகிறார்.

கையில் பணம் கிடைக்கும் தருணங்களில், பிரபஞ்சன் கர்ணனாகவும், குமணனாகவும் உருவெடுக்கும் தருணங்களை பவா அவர்கள் அழகாக எடுத்துரைத்துள்ளார்.

தன்னிடம் பணம் இல்லை என்ற காரணத்திற்காக, யாரை, எப்படிப் புகழ்ந்தால் அதை அடைய முடியுமென என அவர் மனம் எப்போதும் கணக்குப் போட்டதுதில்லை எனவும், எழுத்தாளன் என்பவன் எப்போதும் மனதாலும், உடலாலும் சொந்தமானவன் என்ற கொள்கை உடையவர் பிரபஞ்சன் எனவும் குறிப்பிடுகிறார்.

ஒரு கலைஞன் ஒட்டுமொத்த மானுட பசியைப் போக்க, ஒருபக்கம் பாடிக்கொண்டே, தன் சொந்த பசிக்கான ரொட்டித் துண்டுகளையும் தினம் தினம் தேட வேண்டியிருக்கிறது என பிரபஞ்சனின் வறுமையையை பவா குறிப்பிடுகிறார்.

பிரபஞ்சனைப் பொறுத்தவரை , பெண்கள் எழுத ஆரம்பித்தால் மட்டுமே, பல நூறு ஆண்டுகளாகப் புதையுண்டு கிடக்கும் மௌனம் உடையும், போர்ப் பாடல் கேட்கும்.

அது கரடு தட்டி போன இந்த மானுடச் செவியின் பறைகளை கிழிக்கும் எனச் சொல்வதன் மூலம் நெஞ்சம் நிமிர நிற்கும் உன்னதப் படைப்பாளியாக விளங்குகிறார்.

பிரபஞ்சனின் எல்லாக் கதைகளுமே மனித வாழ்வின் மேன்மையையும், மனிதர்களின் உயர்வை மட்டுமே பேசுபவை.

வாழ்க்கை என்பது நிகழ்ச்சிகளாலும் நினைவுகளாலும் உணர்வுகளாலும் ஆனது.

தமிழ்ச் சமூகம் பெற்ற மாபெரும் எழுத்தாளர் பிரபஞ்சன் பற்றிய பவாவின் வார்த்தைகள் நம்முள் பரவச நிலைகளையும்,தொட்டுணர முடியாத நிழல்களையும் ஏற்படுத்துகிறது.

இன்னும் பல ஆளுமைகள் தொடர்பான கட்டுரைகளும் இதில் இடம் பெற்றுள்ளன.

வாசித்து இன்புறுங்கள்.

No comments:

Post a Comment

கற்போம் எழுதுவோம் இயக்கம்-2020"

 தலைப்பு: "கற்போம் எழுதுவோம் இயக்கம்-2020" # கவிஞர்: ந டில்லிபாபு # பள்ளி: ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி- தாளவாடி # கல்வி மாவட்டம...